Pages

Wednesday, June 22, 2011

“அவர் உங்களை காஃபிர் என்று அறிவித்தவராயிற்றே..!”

 

மௌலானா அஷ்ரப் அலி தஹ்னவி : சில குறிப்புகள்- 3

இவர் இன்ன சிந்தனைப் பிரிவைச் சேர்ந்தவர், இவர் இன்ன அமைப்பைச் சேர்ந்தவர், இவர் இன்ன ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என மக்களுக்கு அடையாளமிட்டு பிரித்துப் பார்க்கின்ற இன்றைய வழக்கங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லாமா அஷ்ரப் அலீ தானவி.

எதனையும் உயர்ந்த நோக்கோடு, விவேகத்துடனும் ஞானம் நிறைந்த பார்வையுடனும் அணுகுவதுதான் அவருடைய தனிச் சிறப்பு. மார்க்கத்தின் பொதுவான நலன்களைத்தான் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். இதனை வெளிப்படுத்துகின்ற ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
மௌலானா அஹ்மத் ரஜா கான் ஃபாஸில் பரேல்வி (1856 - 1921) அவர்களைக் குறித்து அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சொல்ல வந்ததை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அழுத்தம்திருத்தமாக எடுத்துரைப்பதில் புகழ்பெற்றவர் அவர்.

இது எங்கு போய் முடிந்ததெனில் சில மார்க்க அறிஞர்களைக் குறித்து இறைமறுப்பாளர்கள் என்று ஃபத்வா கொடுத்துவிட்டிருந்தார் அவர்.
அல்லாமா அஷ்ரப் அலீ தானவி ஒருநாள் அஸருக்குப் பிறகு தம்முடைய சீடர்களுடன் அமர்ந்திருந்த வேளையில்தான் மரணம் பற்றிய தகவல் கிடைக்கின்றது. “அல்லாமா! அஹ்மத் ரஜா கான் இறந்துவிட்டாராம்..!” என்று அந்தத் தகவலைச் சொன்னார் ஒரு சீடர்.

அல்லாமாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மௌலானா என்றோ ஜனாப் என்றோ மரியாதை கொடுத்துச் சொல்லாமல் நான்கு வயதுப் பையனைக் குறித்துச் சொல்வதைப் போல அந்த மிகப் பெரும் மார்க்க அறிஞரின் பெயர் குறிப்பிடப்படுவது அல்லாமாவுக்குப் பிடிக்கவில்லை.

“யாரு? மௌலானா அஹ்மத் ரஜா கான் பரேல்வி அவர்களா?”

“ஆமாம். அல்லாமா!”

“இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்” எனச் சொன்ன அல்லாமா, “வாருங்கள். அவருக்காகப் பிரார்த்திப்போம்” எனச் சொல்லியவாறு இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டார். அங்கு இருந்தவர்களும் கைகளை ஏந்தி பிரார்த்தித்தனர்.

ஆனால் இது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அல்லாமா பிரார்த்தனையை முடித்ததும் வாய் திறந்து கேட்டு விட்டார்கள். “அல்லாமா! ஒரு பித்அத்தியை (இறைத்தூதரின் வழிமுறைக்கு அப்பாற்பட்ட புதுமையானவற்றை மார்க்கத்தில் புகுத்துகின்றவர்) மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்வதா?” என்றனர்.

அல்லாமா அஷ்ரப் அலீ தானவி சொன்னார்: “அவர் பித்அத்தி அல்லர்; முஹப்பதி (மிகையான அன்பு கொண்டவர்). ஒருவர் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் கொண்டிருக்கும் போது மிகையான பற்றுடன் நடந்து கொள்ளத்தான் செய்வார்கள்...”

அல்லாமா சொல்லி முடிப்பதற்குள்ளாக இன்னொருவர் சொன்னார்: “அவர் உங்களை காஃபிர் - இறைமறுப்பாளர்  என அறிவித்தவராயிற்றே..! அப்படியிருந்தும் அவருக்காக நீங்கள் பிரார்த்தித்தது ஏனோ?”

அல்லாமா மிகவும் நிதானமாக, மென்மையாக பதிலளித்தார்: “மகனே! நான் ஒரு இறைமறுப்பாளன் என்று அவர் என்னைப் பற்றி உறுதியான தீர்மானத்திற்கு வந்துவிட்டிருந்தார். நான் எடுத்துரைத்த கருத்துகளில் ஏதோவொன்று அவருடைய பார்வையில் இறைநம்பிக்கைக்கு மாற்றமான கருத்தாகப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் அவர் அந்தத் தீர்மானத்திற்கு வந்து விட்டிருக்க வேண்டும். என்னுடைய பேச்சையோ, செயலையோ பார்த்து இறைவனையே மறுக்கின்றவர் இவர் என்கிற தீர்மானத்திற்கு வந்து விட்ட பிறகு அவர் என்னைக் குறித்து ‘காஃபிர்’ என அறிவிக்காமல் இருந்திருப்பாரேயானால் அவர் ‘காஃபிர்’ ஆகிவிட்டிருப்பார். ஃபிக்ஹு சட்டத்தின் உறுதியான விதி இது”.
.... .... ....

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...