Pages

Tuesday, June 11, 2013

தலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைகள்




“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள். 

அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் - வாழ்க்கை நெறியில் உங்க ளுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்க ளுக்கு ‘முஸ்லிம்கள்’ என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு அதே பெயர்தான்!) - தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக! எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள், மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன் தான் உங்களுடைய பாதுகாவலன், அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்! (திருக்குர்ஆன் 22 : 77,78)


அ) இயல்பான பாலியல் தேவையை நிறைவேற்றுதல்; மனத் திருப்தியயும் அமைதியையும் பெறுதல்..  
                                                                              (பார்க்க ; 7: 189)
ஆ) கண்ணியத்தையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி.                           (பார்க்க : 4 : 24)

இ) பரஸ்பர அன்பு நேசம் ஆகியவற்றின் அடிப்படையில் இனிமையான இல்லற வாழ்வுக்கான அடித் தளம் அமைத்தல்                                   (பார்க்க : 30 : 21)

ஈ) மனித இனத்தின் பாதுகாப்பு மற்றும் சந்ததி களைப் பெருக்கிக் கொள்ளுதல்                (பார்க்க 42 : 11)

மணமகனையோ அல்லது மணமகளையோ தேர்ந்தெடுக்கும் போது செல்வ வளம், அழகு, இனம், கோத் திரம், படிப்பு போன்றவற்றை அளவுகோலாக வைத்துக்கொள்வதற்குப் பதிலாக நடத்தை மார்க்கப் பற்று, போன்றவற்றுக்கே முதன்மை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அ) மணமகன், மணமகள் என இருவருடைய ஒப்புதலும் இருக்க வேண்டும்.

ஆ) மஹர்: பெண்ணை மணமுடித்துக் கொள்வதற்காக மணமகன் மஹர் என்கிற மணக்கொடையைக் கொடுக்க வேண்டும்.

இ) பெண்ணின் வக்காலத்து செய்யக் கூடியவரும் இரண்டு சாட்சிகளும் இருக்க வேண்டும்.

ஈ) திருமணம் பற்றிய அறிவிப்பு செய்யப்பட வேண்டும். ஊரார் அறிய திருமணம் நடக்க வேண்டும்.

 2.1 திருமணம்: கணவனுக்கும் மனைவிக்கும் இடையே செய்யப்படுகின்ற ஒப்பந்தம் (contract) தான் திருமணம்.

அ) இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் தமக்குள் பாலுறவை வைத்துக் கொள்வது அவர்களுக்கு ஆகுமானதாகும்.

ஆ) அவர்கள் மூலமாகப் பிறக்கின்ற குழந்தையின் பாரம்பர்யம் நிறுவப்படுகின்றது.

இ) அவர்கள் இருவர் மீதும் கடமைகளும் உரிமைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன.

2.2 இத்துணை நாட்களுக்குத்தான் அல்லது இத்துணை ஆண்டுகளுக்குத்தான் என திருமணத்தைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அடைத்து விடுவதை (timebound marriage) இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை.

2.3 திருமணம் புரிந்து கொள்ளும் போது வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம் என்கிற எண்ணம் மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் இருக்க வேண் டும். ஆனால் இடைக்காலத்தில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதெனில், இருவரும் சேர்ந்து வாழவே முடியாத அளவுக்கு அந்தக் கருத்து வேறுபாடும் மனக் கசப்பும் முற்றிப் போய் விட்டதெனில் இந்த நிகாஹ் என்கிற திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம். இந்த மணமுறிவை தலாக், குளா, ஃபஸ்கே நிகாஹ் என்று வகைப்படுத்தலாம்.

3.1 திருமண ஒப்பந்தத்தை முறிக்கவோ துடைத் தழிக்கவோ கணவனுக்கு இருக்கின்ற அதிகாரத்திற்குப் பெயர் தான் தலாக். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் திருமணத்தை முறிக்கவோ துடைத்தொழிக்கவோ செய்வதற்காகப் பயன்படுத்துகின்ற சொல்லும் தலாக் தான்.

3.2  திருமண ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக மனைவிக்குத் தரப்பட்டுள்ள உரிமை தான் குளா. திருமண ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கணவனை இணங்கச் செய்வதற்காக, திருமணத்தின்போது கணவன் கொடுத்த மஹர் பணத்தையும் கணவன் கொடுத்த பொருளை அல்லது அவற்றின் ஒரு பகுதியையும் அவள் கணவனுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.

3.3 ஃபஸ்கே நிகாஹ் தஃப்ரீக்கே பைன சவ்ஜைன் : ஒரு தம்பதியின் திருமண உறவை ரத்து செய்வதற்கு சமூகத்தின் முதன்மை காஜி (நீதிபதி)க்கு இருக்கின்ற அதிகாரம் தான் ஃபஸ்கே நிகாஹ். தம்பதியினரை பிரிப்பதற்கு அவருக்கு இருக்கின்ற அதிகாரம்தான்  தஃப் ரீக்கே பைன சவ்ஜைன்.

4.1 அறிவுக்குப் பொருத்தமான நியாயமான காரணங்களின் அடிப்படையில் தலாக், குளா ஆகியவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆனால் இந்த விஷயத்தில் சட்டுபுட்டென்று காரியமாற்றாமல் நிதானத்துடனும் காலம் தாழ்த்தியும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். ஆற அமர எல்லாக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பிணக்குக்கு வித்திட்ட காரணங்களைக் களைவதற்காக, திருத்திக் கொள்வதற்காக கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. இவ்வாறு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகும் சிக்கல் நீடித்தால் மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கணவனோ அல்லது மனைவியோ மனநிலை பாதிக்கப்பட்டு விட்டால் அல்லது கணவன் ஆண்மையற்றவராக இருந்தால் சிகிச்சை செய்வதற்கு பொருத்தமான கால அவகாசத்தைத் தருவது அவசியம் ஆகும்.

4.2 பிரிந்து போவதற்கான நியாயமான, ஆகுமான காரணம் இருந்தாலும் பிரிவை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மாற்றுத் தீர்வைத் தேடியடைவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. எடுத்துக்காட்டாக, கணவனின் பாலியல் தேவையை நோய் அல்லது உடல் பலவீனம் காரணமாக மனைவியால் நிறைவேற்ற முடியாமல் போகும் போது அவளை கைவிடுவதற்குப் பதிலாக இன்னொரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ளலாம்.

4.3 ஒருவர் மற்றவரின் தவறுகளையும் பிழைகளையும் மன்னிக்காமல் அவற்றையே எண்ணி எண்ணி குமைந்து கொண்டிருப்பதன் காரணமாகத் தான் கருத்து வேறுபாடும் மோதலும் வளர்வதற்கு அடிப்படையான, முதன்மையான காரணமாகும். ஒருவர் மற்றவரின் தவறுகளை மன்னித்துவிடுமாறு இறைநம்பிக்கையாளர்களுக்குக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது. (பார்க்க 3 : 134)

4.4 வேறுபாடுகளையும் மனத்தாங்கல்களையும் ஊட்டி வளர்ப்பது கோபம்தான். இறைநம்பிக்கையாளர் களின் முக்கியமான பண்பு கோபத்தை விழுங்கிக் கொள்ளுதல் என குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க : 3:134)

 4.5 கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவரு டைய சில குணங்கள் மற்றவருக்கு பிடிக்காமல் போகும் போது அந்த அதிருப்தி வெறுப்பாக வளர்ந்து பிளவு வரை கொண்டு சென்றுவிடுகின்றது. இது தொடர்பாக குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்குக் கூறுகின்ற அறிவுரை என்ன தெரியுமா? ‘அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைகொள்ளுங்கள். ஏனெ னில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகள் வைத்திருக்கக் கூடும்.’ (பார்க்க 4 : 19) ஒருவர் மற்றவரின் எதிர்மறையான அம்சங்களில் மட்டும் தம்முடைய பார்வைகளைக் குவித்து வைக்காமல் நேர்மறையான அம்சங்களை மதித்து வாழ வேண்டும்.

4.6 கணவனாகட்டும், மனைவியாகட்டும் தம்முடைய உரிமைகள் மீது காட்டுகின்ற அக்கறையை தம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடமை கள் மீது செலுத்தத் தவறினாலும் அது மனக் கசப்புக்கும் கருத்து வேறுபாட்டுக்கும் பிளவுக்கும் வித்திடும். இந்த விஷயத்தில் குர்ஆன் மிகப் பெரும் எச்சரிக்கையை விடுத்து பிளவுக்கான இந்தப் பாதையையும் அடைத்து விடுகின்றது. “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும்.” (பார்க்க 61 : 2,3)



4.7 பிரிவுக்கு வித்திடுகின்ற முக்கியமான, அடிப் படையான காரணம் என்ன தெரியுமா? கணவனுக்கு அல்லது மனைவிக்கு அல்லது இருவருக்கும் தமது அந் தஸ்து என்னவென்பது நினைவில் நிற்காமல் போவது தான். என்னுடைய மனைவி என்னிடம் நல்ல முறை யில் நடந்து கொள்ள வேண்டும் என்று கணவன் எதிர்பார்க்கின்றான். ஆனால் அதே சமயம் மனைவிக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை மறந்து விடுகின்றான். இதனைத் தான் குர்ஆன் இருபாலாருக்கும் உரிமைகள் இருக்கின்றன என்று அழகாக சுட்டிக்காட்டுகின்றது. (பார்க்க 2: 228). அதே சமயம் இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்ப விவகாரங்களில் இறுதி முடிவை எடுக்கின்ற அதிகாரம் கணவனுக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது. இதனைத் தான் குர்ஆன் ‘ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்’ என்று அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளது. (பார்க்க 4 : 34)

5.1 அறிவுரை : மனைவி வரம்பு மீறி நடந்து கொள் கின்றாள் அல்லது மாறு செய்கின்றாள் எனில் அவளுக்கு அறிவுரை கூறுங்கள்; நல்லறிவு புகட்டுங்கள்; பக்குவமாக எடுத்துரைத்து திருத்துங்கள்; இவ்வாறாக அவளைத் திருத்த முயலுங்கள் என்றே இஸ்லாம் அறிவு றுத்துகின்றது. (பார்க்க : 4 : 34)

5.2 எச்சரித்தல் : அறிவுரை சொல்லியும் திருந்தவில்லையா? அறிவுறுத்தி எச்சரிக்கும் விதமாக தற்காலிகமாக அவளைப் படுக்கையிலிருந்து தள்ளி வையுங்கள் என்றும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.

5.3 தண்டித்தல் : நல்லறிவு புகட்டியும் அறிவுறுத்தியும் எச்சரித்தும் கூட மனைவி திருந்தவில்லையெனில் தேவைக்கேற்ப அவளை அடிக்கலாம் என கணவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க 4 : 34). அண்ணல் நபிகளார்(ஸல்) அவர்கள் மனைவிமார்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கிய போதெல்லாம் விருப்பமில்லாமல் தான் அனுமதியளித்துள்ளார்கள். மனைவியை அடிப்பது விரும்பத்தக்கதல்ல என்று எடுத்துரைத்துள்ளார்கள். காயமடைகின்ற அளவுக்கு அடிப் பதைக் கண்டித்துத் தடுத்துள்ளார்கள். முகத்தில் அடிக்கக் கூடாது. கன்னத்தில் அறையக் கூடாது. கெட்ட வார்த் தைகளால் திட்டி அவளின் மனதைக் கீறிக் காயப்படுத்தக் கூடாது என்றும் அண்ணல் நபிகளார்(ஸல்) அறிவு றுத்தியுள்ளார்கள். தவறுக்கேற்ப தண்டனை இருக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

5.4 மத்தியஸ்தம் செய்தல் : மேலே சொல்லப்பட்ட மூன்று வழிமுறைகளைக் கையாண்டும் மனைவி திருந்தத் தவறினால் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிப் போனால் மண வாழ்வே முறிந்து போகுமோ என்கிற அளவுக்கு நிலைமை முற்றிப் போனால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடு வரையும் மனைவியின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும் நியமித்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளும்படி இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.  (பார்க்க 4 : 35) கணவன் மனைவிக்கிடையே இணக்கத்தையும் புரிதலையும் ஏற்படுத்துவதற்காக முயல்வது தான் அந்த இரண்டு நடுவர்களின் முதன்மைப் பொறுப்பாகும்.

6.1
பிளவுக்கும் மனக்கசப்புக்கும் வித்திடுகின்ற காரணிகளைக் களைய முடியவில்லை; திருத்துகின்ற முயற்சிகள் அனைத்தும் தோற்று விட்டன; நடுவர்களை வைத்து மத்தியஸ்தம் செய்கின்ற முயற்சியும் கைகூடவில்லை என நிலைமை எல்லை மீறிப் போகும்போது பிரிவுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அந்தப் பிரிவுக்கான நடவடிக்கையின் போது கூட மீண்டும் இணைவதற்கான கதவு சற்றே திறந்து வைக்கப்படுகின்றது என்பது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பு. இப்போது தலாக் கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னவென்று பார்ப்போம்.

6.2 தலாக் கொடுக்கின்ற சமயத்தில் மனைவி தூய்மையான நிலையில் இருக்க வேண்டும். அதுவும் இரண்டு சாட்சிகளை முன்னிறுத்தி சொல்ல வேண்டும். ஏதாவது காரணத்தால் மனைவி அந்த இடத்தில் இல்லாமல் போனால் காகிதத்தில் எழுதிக் கூட கொடுக்கலாம்.

6.3 மனைவி தூய்மையான நிலையில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  தூய்மையான நிலை என்பதற்கு என்ன பொருள்? அதாவது அவள் மாதவிடாய் (பெண்களுக்கு மாதம் ஒரு முறை ஏற்படும் இரத்த வெளியேற்றம்) ஏற்படாத நிலையில் இருக்க வேண்டும். மாதவிடாய்க்கு ஆளாகி இருக்கின்ற நிலையில் தலாக் சொல்வது ஹராம் ஆகும். கணவனுடன் உடலு றவு செய்த தூய நிலையில் தலாக் சொல்வதும் ஹராம் ஆகும். (பார்க்க : அத்தியாயம் அத்தலாக், மஆரிஃபுல் குர்ஆன்).

6.4 ஒற்றை தலாக் சொல்லி பெண்ணை விட்டு விட்ட பிறகு இத்தா காலம் கழிந்து விட்டதெனில் அவள்  திருமணத்திலிருந்து விடுதலை பெற்று விடுவாள். மூன்று தடவை மாதவிடாய் ஏற்பட ஆகின்ற கால அளவைத் தான் இத்தா காலம் என்று சொல்கின்றார்கள். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் நிகழ்கின்ற வரை அல்லது கரு கலைகின்ற வரை ஆகின்ற கால அளவு தான் இத்தா காலம் ஆகும்.

6.5 இந்த இத்தா காலம் முழுவதிலும் பெண் தன்னுடைய கணவனின் வீட்டிலேயே இருப்பாள். கணவன் அவளை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது. அவ ளும் தானாக வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக் கூடாது. (பார்க்க 65 : 1) அவ்வாறு வெளியேற்றினாலோ அல்லது தானாக கோபித்துக் கொண்டு வெளியேறினாலோ இருவரும் பெரும் பாவம் இழைத்தவர்களாவர். இந்தக் கட்டளையில் இழையோடுகின்ற உளவியல் நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். தலாக் சொல்லப் பட்ட பிறகும் இத்தா காலம் முடிகின்ற வரை ஒரே வீட்டில் தங்கி இருப்பதால் இருவரும் மீண்டும் பேசுவதற் கும் இரண்டு மனங்களும் மீண்டும் இணைவதற்கும் உள்ளங்கள் கனிவதற்கும் ஒரு சின்ன வாய்ப்பு மலர்வதற்கு சாத்தியம் இருக்கின்றது. தலாக் சொல்லப்பட்ட பெண் நடத்தை கெட்ட பெண்ணாக இருந்தால் மட்டுமே வீட்டை விட்டும் வெளியேற்றுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

6.6 இத்தா காலத்தில் பெண்ணின் உணவு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்பு கணவனுக்கு உரிய தாகும். இந்தப் பொறுப்பை அவன் தொடர்ந்து நிறை வேற்ற வேண்டும்.

6.7 ஒற்றை தலாக் சொல்லி இருந்தால் இத்தா காலத்தில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. நிகாஹ் ஸானி என்கிற இரண்டாவது நிகாஹ் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் அவளை அலைக்கழிக்க வேண்டும்; தொல்லை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் மீண்டும் இணையக் கூடாது. இத்தா காலம் முடிந்ததும் நல்லபடியாக அவளை அனுப்பி விட வேண்டும் (பார்க்க 2 : 231)

6.8 மீண்டும் இணைய விருப்பம் இல்லையானால் இத்தா காலம் முடிந்ததும் அவளை நல்ல முறையில் அனுப்பி விட வேண்டும். இத்தா காலம் முடிந்த பிறகு அந்த இரண்டு மனங்களும் மீண்டும் இணைய விரும்பினால் நிகாஹ் செய்து கொள்ளலாம். (ஒற்றை தலாக் மட் டும் சொல்லி இருந்தால் தான் இந்த வாய்ப்பு)

6.9 இத்தா காலம் முடிவடைந்த பிறகு பெண்ணை நல்ல முறையில் அனுப்ப வேண்டும் என்பதன் விளக்கம் பின்வருமாறு :

 அ) முதலாவதாக, நிகாஹ்வின் போது அவளுக்குக் கொடுத்திருக்க வேண்டிய மஹர் கொடுக்கத் தவறி இருந்தால் அதனைக் கொடுத்து விட வேண்டும்.

ஆ) நிகாஹ்வின் போது பெண் தன் தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சாமான்கள், பொருட்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் அனைத்தும்.

இ) நிகாஹ்வின் போது கணவனும் மற்ற உறவினரும் அவளும் கொடுத்த நகைகள் மற்றும் அன்பளிப்புகள்.

ஈ) கணவன் உகந்த முறையில் ஏதாவது பொருளைக் கொடுத்தே அனுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். (பார்க்க 2 : 241)

7.1 தலாக்கே ரஜஈ : பெண் தூய்மையான நிலையில் இருக்கும் போது ஒற்றை தலாக் கொடுத்துவிட்டு இத்தா காலத்தைக் கழிக்கட்டும் என்றும் விட்டு விடுதல். இத்தா காலம் முடிவடைவதற்கு முன்பு மீண்டும் இணைந்து விடுவதற்கு உரிமை உண்டு. இத்தா காலம் முடிவடைந்த பிறகும் பரஸ்பர இணக்கத்துடன் மீண்டும் நிகாஹ் செய்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.

7.2 தலாக்கே பாயின் : ஒரே மூச்சில் இரண்டு தலாக் அல்லது விட்டு விட்டு இரண்டு தடவை தலாக் சொல்லுதல். இரண்டாவது தலாக் சொன்ன பிறகு மீண்டும் இணைவதற்கான உரிமை இல்லை. ஆனால் இத்தா காலத்தின் போதோ அல்லது இத்தா காலம் முடிவடைந்த பிறகோ பரஸ்பர இணக்கத்துடன் மீண்டும் நிகாஹ் செய்துகொள்ளலாம்.

7.3 தலாக்கே முகல்லிஜ : மனைவி தூய்மையான நிலை யில் இருக்கும் போது ஒரே மூச்சில் அல்லது விட்டு விட்டு மூன்று முறை தலாக் சொல்லுதல். மூன்றாவது தலாக் சொன்ன அந்தக் கணத்திலேயே பெண் ஹராமாகி விடுகின்றாள். அதற்குப் பிறகு இணைவதற்கும் வாய்ப் பில்லை. இத்தா காலம் முடிந்த பிறகு மீண்டும் நிகாஹ் செய்து கொள்வதற்கும் வாய்ப்பில்லை. இத்தா காலம் முடிவடைந்த பிறகு அந்தப் பெண்ணுக்கும் வேறொரு வருக்கும் திருமணம் நடந்து அவருடன் இல்லற வாழ்வு நடத்திய பிறகு அந்த நபர் அவளைத் தலாக் கொடுத்து விட்டாலோ அல்லது அந்த நபர் இறந்துவிட்டாலோ தான் முதல் கணவனுடன் அவள் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள முடியும். இதனைத்தான் ஹலாலா என்கின்றோம். யதேச்சையாக இவ்வாறு அமைந்துவிட் டால் பாதகமில்லை. ஆனால் இவ்வாறு திட்டமிட்டு ஹலாலா திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்ட தல்ல.

8.1 தலாக்கே அஹ்ஸன் : மனைவி தூய்மையான நிலையில் இருக்கின்ற போது ஒற்றை  தலாக் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒற்றை தலாக் கொடுத்து இத்தா காலம் முடிவடைந்து விடுகின்றது எனில் இந்த வகையான தலாக்குக்கு தலாக்கே அஹ்ஸன் என்று சொல் வார்கள். தலாக்கின் வகைகளிலே இஸ்லாத்தில் மிக அதிகமாக விரும்பப்படுகின்ற தலாக் இது.

8.2 தலாக்கே ஹஸன் மனைவி தூய்மையான நிலையில் இருக்கின்ற போது ஒரு தலாக் கொடுக்க வேண்டும். அவருக்கு இரண்டாவது தடவை மாத விடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த நிலையில் இருக்கின்ற போது இரண்டாவது தலாக் கொடுக்க வேண்டும். அடுத்து மூன்றாவது தடவை மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையான நிலையை அடைந்த பிறகே மூன்றாவது தலாக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று தவணைகளில் இடைவெளி விட்டு விட்டு மூன்று தலாக் சொல்வதைத் தான் தலாக்கே ஹஸன் என்று சொல்கின்றார்கள். இஸ்லாத்தில் இந்த வகையான தலாக்குக்கு அனுமதி இருக்கின்றது.

8.3 தலாக்கே பித்அத்: ஒரே மூச்சில் ஒன்றுக்கு மேற் பட்ட தலாக் கொடுப்பதையும் அல்லது ஒரு தூய்மை யான நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட தலாக் கொடுப்பதையும் அல்லது மனைவி மாதவிடாய் இருக்கின்ற சமயத்தில் தலாக் கொடுப்பதையும் அல்லது மனைவி தூய்மையான நிலையில் இருந்தாலும் அவளுடன் கணவன் உடலுறவு கொண்டிருப்பாரேயானால் அந்தத் தூய நிலையில் தலாக் கொடுப்பதையும்  தலாக்கே பித்அத் என்பார்கள். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு  தலாக் கொடுப்பவர் பாவியாவார்.

9.1 பெண் மாதவிடாய்க்காளாகி இருக்கின்ற போது ஒருவர் தெரியாத்தனமாக தலாக் கொடுத்து விட்டால் உடனே சேர்ந்து விடுவது வாஜிபாகும். இது மீண்டும் சேர்வதற்கான தகுதி கொண்டதாக இருக்க வேண்டியது அவசியமாகும் (மஆரிஃபுல் குர்ஆன்).

9.2 தலாக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதற்குத் தவிர்க்க முடியாத காரணம் இருக்கின்ற பட்சத்தில் அவ ளுடன் சேர்ந்துவிட வேண்டும். அவள் தூய்மையான நிலையை எய்திய பிறகு மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அந்த மாதவிடாயும் முடிந்து அவள் தூய்மையான நிலையை அடைகின்ற வரை திருமண ஒப்பந்தத்தில் அவளைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.   அதன் பிறகு தலாக் கொடுப்பதை அவசியம் என உணர்ந்தால் அவள் தூய்மையான நிலையில் இருக்கும் நேரத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளாத நிலையில் தலாக் கொடுக்கலாம்.

9.3  ஒருவர் தாம் செய்தது தான் சரி என்று முரண்டு பிடித்தால் தாம் செய்தது தவறு, பாவம் என்று அறிந்த பிறகும் அதிலேயே நிலைத்து நின்றால், மனைவியுடன் மறுபடியும் சேர்வதற்கு இணங்கவில்லையெனில் அந்தத் தலாக் உறுதியாகி விடுகின்றது.

9.4. மனைவி தூய்மையான நிலையில் உடலுறவு கொண்டிருக்க, அதன் பிறகு கரு தரித்ததற்கான அடையாளங்கள் தெளிவாக புலப்படத் தொடங்கி விட்டால் அதன் பிறகு தலாக் கொடுக்கப்படலாம்.

 10.1 ஒன்றுக்கு மேற்பட்ட தலாக்குகளைக் கொடுப் பது இஸ்லாத்தில் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு நடந்து கொள்பவன் மோசமான பாவி ஆவான்.   ஒருவர் அறிந்தோ அறியாமலோ அல்லது முட்டாள்தனமாகவோ இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தலாக்குகளைச் சொல்லி விடுகின்றார் எனில் அவருடைய நிலைமை என்ன?

10.2 தலாக் என்கிற சொல்லைச் சொல்லும் போது ஒற்றை தலாக்கைச் சொல்வது தான் தன்னுடைய எண்ணமாக இருந்தது என்றும், அந்த எண்ணத்தில் தான் அவர் தலாக் என்கிற சொல்லை அழுத்தமாகவும் தெளிவாகவும் விளங்கச் செய்வதற்காக பலமுறை அதனை உச்சரித்ததாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட தலாக்குகளைக் கொடுப்பது தன்னுடைய நோக்கமாக இருக்கவில்லை என்றும் தலாக் சொன்னவர் சத்தியம்  செய்து வாக்குமூலம் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். அது ஒற்றைத் தலாக்காகத்தான் கருதப்படும். (கூடுதல் விவரங்களுக்குப் பார்க்க புதுதில்லியின் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள மஜ முஆ குவா னைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு)  என்கிற நூலின் 144 ஆம் பக்கம்). அந்தத் தலாக் தலாக்கே ரஜஈ என்றே கருத்தில் கொள்ளப்படும். பெண்ணின் இத்தா காலத்தில் மீண்டும் அவளுடன் இணைவதற்கும் இத்தா காலம் முடிவடைந்த பிறகு அவ ளோடு இரண்டாவது தடவையாக திருமணம் புரிந்து கொள்வதற்கும் அனுமதி நீடிக்கும்.

10.3 ஆனால் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற் பட்ட தலாக் சொல்லப்பட்ட போது,  ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட தலாக் சொல்வதுதான் தலாக் கொடுத்தவரின் எண்ணமாக இருந்ததெனில் அவருடைய எண்ணத்திற்கேற்ப இரண்டு அல்லது  மூன்று தலாக்குகள் உறுதியாகிவிடும்.
அந்தத் தலாக் சொன்ன பிறகு இத்தா காலத்திலும் இணைவதற்கு வாய்ப்பிருக்காது. இத்தா காலம் முடிந்த பிறகு இரண்டாவது தடவையாக அதே பெண்ணுடன் நிகாஹ் செய்து கொள்வதற்கும் வாய்ப்பில்லை. யதேச்சையாக ஹலாலா திருமணம் செய்து கொள்வதற்கான சூழல் அமைந்து விட்டாலேயொழிய அந்தப் பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிட்டு ஹலாலா முறையில் திருமணம் செய்து கொள்வது குற்றமும் பாவமும் ஆகும்.

 11 .1 தலாக் கொடுக்கும் போது பெண் தூய்மையான நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த விஷயத்தில் கணவன் கவனக்குறைவுடன் செயல்பட்டாரேயானால் அவர் உடனடியாக தன்னுடைய பிழையை உணர்ந்து கொண்டு உடனடியாக தலாக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

11 .2 முழுமையாகப் பிரிந்து செல்வதற்கு மூன்று முறை தலாக் சொல்வது அவசியம் என்கிற கருத்தும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. இது சரியல்ல. ஒற்றை தலாக்குடனும் முழுமையான பிரிவை ஈட்டி விட முடியும். இந்த வகையான தலாக்குக்கு தலாக்கே அஹ்ஸன் என்று பெயர். இது தான் தலாக் கொடுப்பதற்கான சரியான இஸ்லாமிய வழிமுறை ஆகும்.

11 .3 தலாக் கொடுத்ததுமே பெரும்பாலான மக்கள் என்ன செய்கின்றார்கள்? உடனடியாக பெண்ணை அவளுடைய பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றார்கள். கணவன் அனுப்பாவிட்டாலும் பெண்ணே சுயமாக வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றாள். இவ்வாறு மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும் பெண் தானாக வீட்டை விட்டு வெளியேறுவதையும் பாவச் செயல்களாக குர்ஆனில் அத்தலாக் அத்தியாத்தில் சொல்லப்பட்டுள்ளது. தலாக் சொல்லப்பட்ட பிறகும் இத்தா காலம் முடிகின்ற வரை கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் தங்கி இருப்பதால் இருவரும் மீண்டும் பேசுவதற்கும் இரண்டு மனங்களும் மீண்டும் இணைவதற்கும் உள்ளங்கள் கனிவதற்கும் ஒரு சின்ன வாய்ப்பு மலர்வதற்கு சாத்தியம் இருக்கின்றது. இதுதான்  இந்தக் கட்டளையில் இழையோடுகின்ற உளவியல் நுட்பமாகும்.

11 .4 தலாக் தலாக் தலாக் என ஒரே வீச்சில் மூன்று முறை தலாக் சொல்வதைத் தான் தலாக்கே முக்லிஜ் என்று மக்கள் நினைக்தின்றார்கள். இதுவும் சரியல்ல. ஒற்றை தலாக் சொல்வதுதான் நோக்கமாக இருந்த தெனில் இவ்வாறு கொடுக்கப்பட்ட தலாக் தலாக்கே ரஜஈயாகத் தான் கருதப்படும். முத்தலாக் கொடுப்பது தான் நோக்கமாக இருந்ததெனில் அது தலாக்கே முக்லிஜாகக் கருதப்படும்.  (பார்க்க : புதுதில்லியின் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட் டுள்ள மஜமுஆ குவானைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு) என்கிற நூலின் 144 ஆம் பக்கம்)

11 .5 திருமணம் நிலைத்திருந்த காலத்தில் மனை விக்கு பலவிதமான பொருட்களையும் அன்பளிப்பு களையும் கணவன் கொடுத்திருக்கலாம். தலாக் கொடுத்துவிட்ட பிறகு இந்தப் பொருட்களிலும் அன்பளிப்புப் பொருட்களிலும் கடுகுமணியளவு பொருளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூடாது.

11 .6 தலாக் கொடுத்துவிட்ட பிறகு தலாக் கொடுக் கப்பட்ட பெண்ணுக்கு தாராளமாகயும் ஏராளமாகவும் இன்னும் அதிக அளவில் கூடுதலாக பொருட்களையும் அன்பளிப்புகளையும் கொடுக்க வேண்டும் என்று கண வனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக இவ்வாறு மக்கள் நடந்து கொள்வதில்லை. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. 

12.1 பிளவுக்கும் பிரிவுக்கும் வித்திடுகின்ற, குளாவுக்கும் தலாக்குக்கும் இட்டுச் செல்கின்ற காரணங்களைக் களைவதற்கான முயற்சிகள் தோற்றுப் போன நிலையில், சீர்திருத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட சூழலில், மத்தியஸ்தர் மூலமாக பேச்சுவார்த்தைகளை நடத்தியும் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் போகும் போது கடைசிக் கட்ட நடவடிக்கையாக கணவனுக்கு தலாக் கொடுக்கின்ற அதிகாரம் இருப்பதைப் போல பெண்ணுக்கும் குளா வாங்கிக்கொள்கின்ற உரிமையைப் பயன்படுத்திக் கொள்கின்ற அதிகாரம் உண்டு. 

12.2 அவள் என்ன செய்வாள்? கணவன் தனக்குக் கொடுத்த மஹரையும் பிற பொருள்கள் முழுவதையும் அல்லது அவற்றில் ஒரு பகுதியையும் கணவனிடம் திரும்பக் கொடுத்துவிட்டு திருமண ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதற்கு அவனை இணங்கச் செய்வாள். பிறகு இருவரும் திருமண ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது என்று முடிவெடுப்பர். அதன் பிறகு கணவன் அவளுடைய கருத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அவளுக்குத் தலாக் கொடுப்பான் அல்லது அதற்கு ஒத்தப் பொருள் உள்ள சொற்களைச் சொன்னாலும் குளா ஆகி விடும். இதுதான் குளா வாங்குவதற்கான வழிமுறை ஆகும்.

12.2 இந்த வகையில் குளா பெறுகின்ற வழிமுறை தலாக்கே பாயின் வகையைச் சார்ந்ததாகும். இந்த வழி முறையில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பரஸ்பர ஒப்புதலுடன் மீண்டும் ஒரு முறை நிகாஹ் செய்து கொள்ளலாம்.

12.4 தலாக் கொடுக்கும் போது இத்தா காலத்தில் பேணப்பட வேண்டிய அதே சட்டதிட்டங்கள் குளா வாங்கிய பிறகும் இத்தா காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

13.1 பொதுவாக தலாக், குளா போன்ற பிரச் னைகள் குடும்பத்துக்குள்ளேயே குடும்பப் பெரியவர்களை மத்தியஸ்தராக வைத்துக் கொண்டு தீர்க்கப்பட வேண்டும் என்றுதான் இஸ்லாம் விரும்புகின்றது. அத்தகைய வழிமுறை தான் கையாளப்பட வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்துகின்றது.

13.2 ஆனால் சமுதாயத்தில் சில சமயம் இவ்வாறு நடப்பதில்லை. எடுத்துக்காட்டாக குளா விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். பிரிந்து விடுவோம் என்று மனைவி விரும்புவாள். ஆனால் கணவனோ பிரிவு வேண்டாம் என்று முரண்டு பிடிப்பான். இத்தகைய சூழலில் காஜி என்கிற சமுதாய நீதியரசர் அந்த இருவருக்கிடையிலான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி கட்டளை பிறப்பிக்கலாம்.

13.3 இதே போன்று மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு கணவன் தலைமறைவாகி விட்டாலோ இவ்வாறு கணவனைப் பற்றிய எந்தத் தகவலுமின்றி நீண்ட நெடுங்காலம் உருண்டோடிவிட்டாலோ கூட காஜி தீர்ப்பு வழங்கலாம். இதே போன்ற பல்வேறு பிரச் னைகளை எதிர் கொள்ள நேரிடும் போது காஜியை பெண் அணுகலாம். தன்னுடைய நிகாஹ்வை ரத்து செய்து தீர்ப்பு வழங்கும் படி விண்ணப்பிக்கலாம். இவற் றைப் பற்றிய கூடுதல் விவரங்களை புதுதில்லியின் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளி யிட்டுள்ள மஜமுஆ குவானைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு) என்கிற நூலில் பார்க்கலாம். (இந்த நூலை வெளியிட்ட அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முகவரி : 76/A okhla main market Jamia Nagar, New Delhi 110 025 phone 26322991)

14.1 தலாக் செய்வதற்கான ஏற்பாடு முழுக்க முழுக்க அநீதியானது ஆகும். பெண்ணுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிதான் தலாக். எனவே பெண்ணை தலாக் செய்கின்ற உரிமை ஆணுக்குக் கொடுக்கப்படக் கூடாது. இந்த ஆட்சேபத்துக்கு என்ன பொருள்? ஒரு தடவை திரு மணம் நடந்துவிட்டதெனில் அந்தக் கணவனும் மனை வியும் வாழ்நாள் முழுவதும் சாகின்ற வரை கணவன் மனைவியாகவே இருக்க வேண்டும் என்பது தானே..! அவர்களுக்கிடையே என்னதான் பெரும் பிணக்கும் மோதலும் மூண்டுவிட்டாலும் எவ்வளவுதான் வெறுப் பும் குரோதமும் மனங்களில் மண்டி விட்டாலும் அந்த இருவரும் இறுதிமூச்சு வரை கணவன் மனைவியாகவே சேர்ந்து வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்புக்கும் நியாயத் துக்கும் முரணானது அல்லவா..! முற்காலத்தில் இணைவைப்பாளர் சமூகங்களிலும் கிறிஸ்துவர்களிடையிலும் இத்தகைய நடைமுறைகள் இருந்தன..! இப்போது அவர்கள் கூட விவாகரத்தின் தேவையை உணர்ந்து அதற்கு சட்டரீதியான அந்தஸ்து கொடுத்திருக்கின்றார்கள்.

14.2 இவர்கள் இன்னொன்றையும் சொல்கின்றார் கள். தலாக் கொடுப்பதற்கான அதிகாரத்தை ஆணுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக நீதிமன்றத்திற்குக் கொடுக்கப் பட வேண்டும் என்பது தான் இவர்களின் வாதம். குடும்பத்தில் குடும்பப் பெரியவர்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை வேலையற்ற வேலையாக நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்வதையும் அங்கு சென்று எல்லா விவரங்களையும் புட்டுபுட்டு வைப்பதையும் கண்ணியம் மிக்க நபர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். அது மட்டுமல்ல, பொதுவாக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு பல்லாண்டுகள் ஆகிவிடுகின்றன. அந்தத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தையும் அந்த இருவரும் நரகவேதனையில் கழிக்க வேண்டுமா, என்ன?

14.3 மூன்று முறை தலாக் கொடுப்பதற்கான அதிகாரம் ஆணுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதேன் என்பது இவர்கள் எழுப்புகின்ற இன்னொரு ஆட்சேபணை. மூன்று முறை தலாக் கொடுக்கலாம் என்று இஸ்லாம் அளித்துள்ள அனுமதியை இஸ்லாம் பெண்களுக்குச் செய்துள்ள மிகப் பெரும் அருட்கொடை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இஸ்லாம் அல்லாத சமூகத்தில் எப்படிப்பட்ட பழக்கம் வேரூன்றி இருந்தது, தெரியுமா? அந்தச் சமூகத்து ஆண்கள் தம்முடைய மனைவியரை தலாக் செய்வார்கள். பிறகு மீண்டும் அவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வார்கள். சிறிது காலம் கழித்து மீண்டும் தலாக் கொடுப்பார்கள். பிறகு மீண்டும் அவர்களைச் சேர்த்துக் கொள்வார்கள். இவ்வாறு ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை அல்ல கணக்கு வழக்கின்றி தலாக் கொடுப்பார்கள்; சேர்த்துக் கொள்வார்கள். பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கத்துடன் தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்று தடவை தலாக் கொடுக்கலாம் என்கிற இஸ்லாத்தின் சட்டத்தைப் பார்க்க வேண்டும்.

14.4 தலாக் கொடுப்பதை இஸ்லாம் மிகவும் எளிதாக்கி விட்டுள்ளது என்பது இவர்கள் சொல்கின்ற அடுத்தக் குற்றச்சாட்டு ஆகும். இதுவும் ஒரு தவறான கருத்து தான். தலாக் கொடுப்பது எளிதானதாகத் தோற் றமளிக்கின்றதே தவிர, உண்மையில் தலாக் கொடுப் பதற்கான நடைமுறை பல்வேறு நிலைகளைக் கொண் டதாக ஆக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மனங்கள் சேர்ந்து வாழும் போது கருத்து வேறுபாடுகள் மூள்வது இயல்பானதே. முதலில் அந்தக் கருத்து வேறுபாடுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. முதலில் அறிவுரை கூற வேண்டும். பிரச்னை தீரவில்லையா, எச்சரிக்கின்ற விதத்தில் படுக்கையிலிருந்து விலக்கி வையுங்கள். அதற்கு பின்பும் சிக்கல் நீடிக்கின்றதா, அடியுங்கள். அடிக்கும் விஷயத்திலும் தெளிவான வரைமுறைகளை இஸ்லாம் வரையறுத்துள்ளது. முகததில் அறையக் கூடாது. காயம் ஏற்படுகின்ற அளவுக்கு அடிக்கக் கூடாது என்றெல்லாம் நெறிமுறைகள் உள்ளன. அதன் பிறகும் பிரச்னை தீரவில்லையெனில் குடும்பப் பெரியவர்கள் இருவரை மத்தியஸ்தர்களாக ஆக்கிக் கொண்டு பிரச்னையைத் தீர்க்கப் பாருங்கள். அதற்குப் பிறகும் பிரச்னை தீரவில்லையெனில் தலாக் கொடுங்கள். அதிலும் அவசரப்படக் கூடாது. தூய்மையான நிலைக்காகக் காத்திருங்கள். முதலிலேயே மூன்று தலாக் கொடுத்து விடாதீர்கள். ஒற்றை தலாக் கொடுங்கள். அதிலும் இத்தா காலத்திலேயே மனங்கள் இளகி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இத்தாவில் சேரவில்லையா, இத்தா முடிந்த பிறகு நிக்காஹ் செய்து கொள்ளுங்கள் என அதற்குப் பிறகும் சேர்வதற்கான கதவு திறந்தே வைக்கப்படுகின்றது.

போதாக்குறைக்கு தலாக் கொடுப்பது விரும்பத்தக்க செயல் அல்ல என்று திரும்பத் திரும்பத் தெளிவுபடுத்தப்படுகின்றது. ஹலாலான (ஆகுமான) விஷயங்களில் இறைவன் மிக அதிகமாக வெறுக்கின்ற செயல் தலாக் தான் என்று நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது. தலாக் கொடுக்கும்போது இறைவனின் அர்ஷ் என்கிற ஆட்சிக் கட்டில் நடுங்கு வதாகவும் நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது. ஆக இந்த நிலைகள் எல்லாவற்றைக் கடந்த பிறகும் அந்த இருவரும் பிரிந்து விடவே விரும்புகின்றார்கள் எனில் அவர்களால் சேர்ந்து வாழ முடியாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அத்தகைய சூழலில் அவர்கள் பிரிந்து செல்வதுதான் இரண்டு பேருக்கும் நன்மை அளிக்கும். ஆக, இறுதிக்கட்ட நடவடிக்கையாகத்தான் தலாக் கையாளப்படுகின்றது. எடுத்த எடுப்பிலேயே ஒரே மூச்சில் மூன்று தலாக் சொல்வதை இஸ்லாம் என்றுமே அங்கீகரித்ததில்லை. அதனைக் கண்டிக் கின்றது.

14.5 தலாக் கொடுக்கின்ற அதிகாரம் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று பெண்களுக்கும் ஏன் வழங்கப்படவில்லை? அதற்கு மாறாக கணவனுக்குப் பணம் கொடுத்து இணங்கச் செய்யுங்கள் என்று பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டிருப்பதேன்? என்பது இவர்களின் அடுத்த ஆட்சேபணையாகும். இதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவதாக, நிகாஹ் செய்துகொள்ளும்போது பணம் கொடுத்து அதாவது மஹர் கொடுத்து நிகாஹ் செய்யுங்கள் என்று ஆண்களுக்குக் கட்டளையிடப்பட் டுள்ளது. அதனால் பிரிவின் போது பெண்களுக்கு இவ்வாறு பணம் கொடுத்து, மஹரைத் திருப்பிக் கொடுத்து குளா பெற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, ஆண்களுக்கு இணங்கச் செய்யுங்கள் என்பது எந்த அளவுக்கு பொருளைத் திருப்பித் தர வேண்டும் அல்லது எத்துணை ரொக்கப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பது பற்றிய இணக்கத்தைத் தான் குறிக்கும். கணவன் முரண்டு பிடித்தா லும் அந்தத் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்கின்ற ஃபஸ்க்கே நிகாஹ் அதிகாரம் காஜிக்கு உண்டு.

மூன்றாவதாக, பொதுவாக மனித சமூகத்தில் ஆண் தான் பெண்ணுக்கு பொன்னும் பொருளும் கொடுக்கின்றான். பொருளை வாங்கிக் கொள்வேன்; ஆனால் திருமண பந்தத்தில் இருக்க மாட்டேன் என்று சொல்வது எந்த ஊர் நியாயம்?

15.1 பொதுவாக பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி இருக்கின்ற உரிமைகளையும் குறிப்பாக குளா வாங்கிக் கொள்ளலாம் என்கிற உரிமையைம் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இதனால் தலாக் என்பது பெண்களுக்கு அநீதி இழைக்கின்ற ஒன்று என்பது போல அவர்களுக்குத் தோன்றுகின்றது.

15.2 தலாக் பற்றிய சட்டதிட்டங்கள், அது தொடர்பாக படிப்படியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அது தொடர்பான இஸ்லாமிய அறவுரைகள் போன்ற யாதொன்றையும் அறியாதவர்களாக சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றார்கள்.

15.3 இஸ்லாமிய அறவுரைகளுக்கு முரணாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதும் அவர்களைப் பெரிதும் குழப்பி விடுகின்றது.

15.4 இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் மேற்கத்திய பண்பாடு முன் வைக்கின்ற கருத்தோட்டங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது. ஒரு ஆண் திருமணம் செய்து கொள்கின்றார். தலாக் செய்கின்றார். பிறகு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கின்றார். அதே போன்று ஒரு பெண் திருமணம் செய்து கொள்கின்றார். குளா வாங்கிக் கொள்கின்றார். பிறகு இன்னொரு ஆணை மணந்து கொள்கின்றார். இவ்வாறு இந்த இருவரும் அடிக்கடி செய்கின்றார்கள். இது இஸ்லாத்தின் பார்வையில் மிக மிக வெறுக்கத்தக்க செயல்தான். என்றாலும் இஸ்லாமிய சட்டத்தில் இதற்கு அனுமதி உண்டு. ஏனெனில் இஸ்லாத்தில் ஒரே ஒரு தடவை கூட விபச்சாரத்துக்கும் தகாத உறவுக்கும் இடம் இல்லை. இஸ்லாமிய சட்டத்தில் தகாத உறவில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும்; அந்தத் தகாத உறவில் ஈடுபட்ட ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலுடன் அதில் ஈடுபட்டிருந்தாலும் கூட அது கடுமையான குற்றமாகத் தான் கருதப்படும். ஆனால் இன்று உலகெங்கும் கோலோச்சி வரும் மேற்கத்திய பண்பாட்டில் ஆணும் பெண்ணும் திருமண பந்தத்திற்கு வெளியிலும் பரஸ்பர ஒப்புதலுடன் தகாத உறவை வைத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு ஆண் பல பெண்களோடு திருமண பந்தத்திற்கப்பால் உடலுறவு வைத்துக் கொள்வதையும் ஒரு பெண் பல ஆண்களோடு உடலுறவு வைத்துக் கொள்வதையும் மேற்கத்திய பண்பாடு அங்கீகரிக்கின்றது. இந்தக் கேடுகெட்ட நடத்தைக்கு இஸ்லாத்தில் அறவே இடம் இல்லை. இந்தக் கருத்தோட்டத்தையும் சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு விளக்கிவிடுவது அவகியமாகும்.

16.1 குடும்ப வாழ்வு குறித்து இஸ்லாம் முன் வைக்கும் கட்டளைகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டாம். இதனை ஏதோ சில சட்ட நுணுக்கங்களாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனை எவரோ ஒருவர் வகுத்துத் தந்த சட்டமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தச் சட்டத்தைக் கொடுத்தவன் யார் தெரியுமா? அவன் தான் உங்களை ஆண், பெண் என இணைகளாகப் படைத்தவன் (பார்க்க : 4:1). ஆக உண்மையில் இவை உங்களைப் படைத்தவனிடமிருந்த அனுப்பப்பட்ட சட்டங்கள் ஆகும்.

16.2 இவற்றை வழங்கியவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவன் பேராற்றலுடையோனும் நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான். (பார்க்க 2:228)

16.3 இவையெல்லாமே இறைவனால் வழங்கப்பட்ட சட்டதிட்டங்கள். விருப்பம் இருந்தால் இவற்றின்படிச் செயல்படலாம், விருப்பம் இல்லாவிட்டால் இவற்றை விட்டுவிடலாம் என்று இருந்து விட முடியாது. இவையெல்லாமே இறைவன் விதித்த வரம்புகளாக இருப்பதால் இவற்றை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. விளையாட்டுத்தனம் இல்லாத பொறுப்பு உணர்வுடனும், நாளை மறுமை நாளில் இவற்றைக் குறித்து இறைவனிடம் பதிலளிக்க வேண்டி இருக்கும் என்கிற விழிப்பு உணர்வுடனும்தான் இவற்றை அணுக வேண்டும். வாழ்க்கையில் நாம் எதிர் கொள்ளும் சிக்கல்களை அழகிய முறையில் தீர்த்துக்கொள்வதற்கு பாதை அமைத்துத் தருகின்ற ஏற்பாடாகத்தான் இவற்றைக் கருத வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் இந்த நெறிமுறைகள் மிகப் பெரும் அருட்கொடைகளாக இருக்கின்றன. அவற்றை மதித்து அவற்
றின் படிச் செயல்படுவது மிகவும் அவசியமாகும். (பார்க்க : 2 : 231)

16.4 இந்தச் சட்டத்திட்டங்களை உங்களுக்கு வழங்கிய பிறகு இறைவன் உங்களை அப்படியே விட்டு விட வில்லை. உங்களின் நடத்தை எப்படி இருக்கின்றது என்று அவன் உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (பார்க்க 4 : 1)

16.5 எனவே இந்த சட்டத்திட்டங்களையும் நெறிமுறைகளையும் மதிக்க வேண்டும். இந்தப் பேரண்டத் தைப் படைத்தவன் அருளிய சட்டங்கள் இவை என்கிற மதிப்பச்சத்துடன் இவற்றை அணுக வேண்டும். இறுதித் தீர்ப்புநாளில் இவற்றைக் குறித்து விசாரிக்கப்படும் என்கிற அச்சமும் இருக்க வேண்டும்.

17.1 திருக்குர்ஆனில் அன்னிஸா, அல்பகறா, தலாக் போன்ற அத்தியாயங்களில் நிகாஹ், குளா, தலாக் போன்றவற்றைக் குறித்து அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. இவற்றையும் இன்னும் நிகாஹ், தலாக், குளா குறித்து பேசுகின்ற பிற வசனங்களையும் பல்வேறு குர்ஆன் விரிவுரைகள், நபிமொழி விளக்க நூல்கள் ஆகியவற்றோடும் உலமாக்களின் வழிகாட்டுதலோடும் வாசிக்க வேண்டும். அந்த வசனங்கள் வெளிப்படுத்துகின்ற ஞானத்தையும் பொருளையும் தாத்பர்யத்தையும் உள்வாங்கிக் கொள்ள முயல வேண்டும். முஸ்லிம்கள் எல்லாரும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 17.2 அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள மஜ்முஆ குவானைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு) Compendium of Islamic Laws என்கிற நூலில் நிகாஹ், தலாக், இத்தா,ளிஹார், லிஆன், ஈலா, குளா, ஃபஸ்க்கே நிகாஹ்,  ஹிபா, வஸிய்யத், வாரிசுரிமை, வக்ஃப் போன்ற எல்லாவற்றுக்கும் தெளிவான விளக்கங்களும் விரிவான சட்டவிளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன. இவற்றை வாசிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்த நூல் ஒவ்வொரு முஸ்லிமுடைய வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் ஆகும். (இந்த நூலை வெளியிட்ட அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முகவரி : 76/A okhla main market Jamia Nagar, New Delhi 110 025 phone26322991)

17.3 இந்தப் பிரச்னைகள் குறித்தும் இவற்றைப் பற்றிய மார்க்க நிலைப்பாடுகள் பற்றியும் முஸ்லிம் சமுதாயத்துக்குக் கற்பிப்பதும் எடுத்துரைப்பதும் மிகவும் அவசியமாகும். குறிப்பாக ‘ஒற்றை தலாக்குடன் பிரிந்து போதல்’, ‘தலாக் கொடுக்கும் போது பெண் தூய்மை யான நிலையில் இருக்க வேண்டிய அவசியம்’, ‘ஒரே மூச்சில் மூன்று தலாக் சொல்வது பாவம் ஆகும்’, ‘ஒரே அமர்வில் மூன்று தலாக் கொடுக்கின்ற விஷயத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்’ போன்றவற்றைக் குறித்து முஸ்லிம் சமுதாயத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

17.4  மஸ்லக் அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த வேறுபாடுகளை இஸ்லாமிய ஷரிஅத் அனுமதிக்கின்றது. எனவே இந்த மஸ்லக் பிரச் னையில் தீவிரமான, கடுமையான நிலைப்பாட்டை எடுத்து இவற்றைப் பெரிதுபடுத்தாமல் தத்தமது மஸ்லக்கைச் சேர்ந்த உலமாக்களின் வழிகாட்டுதலில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள முயல்வது சிறப்பானதாகும்.

17.5 இந்த சட்டத்திட்டங்களை சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இந்தப் பிரச்னைகளுக்கு இஸ்லாம் வழங்குகின்ற தீர்வு எந்த அளவுக்கு மனித இயல்புக்கு இணக்கமானதாக இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம் ஆகும்.

- T.M. அப்துர் ரவூஃப் காலித்
தமிழில் : டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...