Pages

Saturday, February 24, 2018

கண்ணியத்தை மீட்டெடுப்போம். எதிர்காலத்தை வடிவமைப்போம்.



பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து நாட்டின் மூலை முடுக்குளிலிருந்து இங்கு திரண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்களே!

இந்த மாபெரும் திடலில் திரண்டிருக்கின்ற இந்த இளைஞர் கூட்டத்தை நான் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்தத் துணைக்கண்டத்தில் எழுந்த முழக்கத்தின் அறுவடையாகப் பார்க்கின்றேன். இஸ்லாத்தை உயிரோட்டமுள்ள வாழ்க்கை நெறியாக முன் வைத்த அந்த முழக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூங்கிக் கிடந்த முஸ்லிம் உம்மத்தை எழுப்பியது. சோம்பிக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்தை சிலிர்த்தெழச் செய்தது. இதன் தொடர் விளைவாக இன்று இஸ்லாம் இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத சித்தாந்த வல்லரசாக -Idealogical super power  - ஆக நிமிர்ந்து நிற்கின்றது.

இன்று உலகம் மிக வேகமாக இஸ்லாம் முன் வைக்கின்ற மாண்புகளையும் நெறிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு வருகின்றது. அசத்திய சக்திகள் இஸ்லாத்துக்கு எதிரான மிகப் பெரும் அளவில் அவதூறு பரப்புரையை முடுக்கிவிடப்பட்டுள்ளன. உலகத்தின் அசத்திய சக்திகள் அனைத்தும் இதற்கான கடைசி முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

என்றாலும் இஸ்லாம் ஒரு மாற்றாக மேலெழுந்து நிற்கின்றது. நவீன உலகின் சிக்கல்களைத் தீர்க்கின்ற தீர்வாக உயர்ந்து நிற்கின்றது. இஸ்லாம் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்பார்ப்பின் மையமாக - இன்னும் சொல்லப்போனால் ஒற்றை மையமாக - மேலோங்கிக் கொண்டிருக்கின்றது.

அன்பர்களே!
இந்த மூன்று நாள் மாநாட்டில் நாட்டின் ஏராளமான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும். நம்முடைய இயக்கத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், தேச அறிவுஜீவிகள், தலைவர் ஆகிய பலரும் உங்களுக்கு முன்னால் நாட்டைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள் குறித்துச் சொல்வார்கள். இந்த நாட்டில் வறுமை எந்த அளவுக்கு வேகமாக கூடிக் கொண்டிருக்கின்றது என்பதையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே போகின்ற அவலத்தையும் நாட்டின் செல்வவளம் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து கொண்டிருக்கின்ற போக்கையும் அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். இனம், சாதி, மொழி, வட்டாரம் ஆகியவற்றின் பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள், தலித்கள், பெண்கள் போன்றோர் மீதான அக்கிரமங்கள் குறித்தெல்லாம் இங்கு பேசப்படும். இன்று காலையில் கூட நாளிதழ்களில் அந்தக் கொடுமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உத்திரப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருத்தியை உயிரோடு கொளுத்திக் கொன்ற கொடூரத்தை வாசித்திருப்பீர்கள்.

அன்பர்களே! இந்த அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும். ஆனாலும் தோழர்களே! நம்முடைய பணி பிரச்னைகள் குறித்து ஒப்பாரி வைப்பதல்ல. பிரச்னைகளைப் பற்றிப் பேசிக் கலைவதும் நம்முடைய வேலை கிடையாது.

இந்த மாநாட்டின் மையக் கருத்துதான் இந்த மாநாட்டின் உண்மையான செய்தியாகும். Reclaiming Dignity. Redesigning Future கண்ணியத்தை மீட்டெடுப்போம். எதிர்காலத்தை வடிவமைப்போம். ஆம். நாம் இங்கே நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்போம். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்போம். அதனை வடிவமைப்பதற்கான பணியில் நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்வோம் என்கிற உறுதியுடன்தான் நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.

அன்பர்களே! மாற்றத்தைக் கொண்டு வருவதில் இரண்டு காரணிகள் பெரும் பங்காற்றுவதாக சமூகவியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஒன்று உந்தித் தள்ளுகின்ற அதிருப்தியுணர்வு Push of discomfort. அதாவது நாட்டின் தற்போதைய அவலங்கள், அக்கிரமங்கள், கொடுமைகள், உரிமை மீறல்கள், ஊழல்கள் போன்றவற்றைப் பற்றிய அதிருப்தியும் கவலையும் உந்தித் தள்ளுகின்ற வகையில் மனத்தை நிறைக்க வேண்டும். இது மட்டும் போதாது. மேலே இழுக்கின்ற நம்பிக்கையுணர்வு Pull of Hope.. அதாவது இன்று உலகத்தில் நடந்துகொண்டிருப்பவை அனைத்தும் நிலையானவை அல்ல. ஒரு சிறப்பான, அழகான, நிறைவான உலகத்தைக் கட்டமைக்க முடியும். அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை.  இந்த இரண்டும்தாம் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வல்லமையும் திறனும் கொண்டவை என சமூகவியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

எனவே, தோழர்களே, இந்த மாநாட்டிலிருந்து நீங்கள் திரும்புகின்ற போது இந்த இரண்டையும் உங்களுடன் கொண்டு செல்லுங்கள். தற்போதைய நடப்புகள் பற்றிய கவலையையும் அதிருப்தியையும் கொண்டு செல்லுங்கள். அதே சமயம் ஒளிமயமான, அழகான, சிறப்பான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான சாத்தியம் பற்றிய நம்பிக்கையையும் ஆசையையும் உறுதியையும் செயல்பட்டாக வேண்டும் என உந்தித் தள்ளுகின்ற நம்பிக்கையுணர்வையும் கொண்டு செல்லுங்கள்.




அன்பர்களே! எஸ்.ஐ.ஓ ஒரு ரியாக்டிவ் இயக்கம் கிடையாது. எதிர் வினையாற்றுகின்ற இயக்கம் கிடையாது. இது ஒரு பிரோ ஆக்டிவ் இயக்கம் ஆகும். இது தாமாக முன் வந்து, தெளிவான இலக்குகளை முன் வைத்து அவற்றை அடைவதற்காக திட்டமிட்ட, திட்டவட்டமான, தீர்க்கமான முறையில் பணியாற்றுகின்ற இயக்கம்தான் எஸ்.ஐ.ஓ.

எதிர்வினையாற்றுகின்ற இயக்கம் எப்படி இயங்கும்? ரியாக்டிவ் என்பது என்ன, பிரோ ஆக்டிவ் என்பது என்ன போன்றவற்றையெல்லாம் நீங்கள் எல்லோரும் நல்ல முறையில் அறிந்திருக்கின்றீர்கள். எதிர் வினையாற்றுகின்ற போது நம்முடைய நிலைமை என்னவாக மாறிவிடுகின்றது? நம்முடைய செயல்திட்டமும், நம்முடைய செயல்பாடுகமும் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. அதற்கு மாறாக மற்றவர்கள் தீர்மானிக்கின்றார்கள். அந்நிய சக்திகள் அவற்றைத் தீர்மானிக்கின்றார்கள். இதுதான் எதிர்வினையாற்றுகின்ற இயக்கம் ஆகும்.

இதற்கு எடுத்துக்காட்டாக புதியதாக நீச்சலைக் கற்றுக்கொள்ள முனைந்திருக்கும் இளைஞனைச் சொல்லலாம். பயமும் அச்சமும்தாம் அவனை ஆட்டிப்படைக்கின்றன. ஆர்ப்பரித்து வருகின்ற ஒவ்வொரு அலையும் அவனை இங்கும் அங்கும் புரட்டிப் போடுகின்றன. அலைகளின் ஆளுகைக்குள் அவன் வசமாகச் சிக்கிக் கொள்கின்றான். ஒவ்வொரு அலையும் அவனை எதிர்பாரா நிலையில் பற்றிக்கொள்கின்றன. சில சமயம் இந்தப் பக்கமும் சில சமயம் அந்தப் பக்கமும் அவன் அலைக்கழிக்கப்படுகின்றான். திடீரெனத் தாக்குகின்ற அலைகளினால் மலைப்பும் அயர்வுக்கும் திகைப்புக்கும் அவன் ஆளாகிவிடுகின்றான். கைகளையும் கால்களையும் ஆட்டுகின்றான். ஒவ்வொரு அலையையும் தனித்தனியாக எதிர்கொள்கின்றான். அலைகளை வெல்வதுதான் அவனுக்கு மிகப் பெரும் கவலையாகிவிடுகின்றது. இதுதான் எதிர்வினையாற்றுகின்ற உளவியல். எந்தச் சமூகங்கள் இந்த உளவியலைக் கொண்டிருக்கின்றனவோ அவற்றால் ஒருபோதும் வெற்றி பெறவே இயலாது.

இன்று பிரச்னைகளும் நெருக்கடிகளும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. நம்முடைய ஷரீஅத்தும் மிகப் பெரும் ஆபத்தைச் சூழ்ந்திருக்கின்றது என்பதும் ஏராளமான தடைகள் இந்தச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கின்றன என்பதும் உண்மையே. ஆனால் நம்முடைய வேலை இந்த அலைகளை வென்றெடுப்பது மட்டுமே அல்ல. நம்முடைய பணி இந்த அலைகளைச் சமாளிப்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடுவதல்ல. அதற்கு மாறாக நாம் தேர்ந்த, வல்லமை நிறைந்த நீச்சல் வீரரைப் போன்றதாகவே இருக்க வேண்டும். அவருடைய கவனமும் ஈடுபாடும் மொத்தமும் தாம் எடுத்துக்கொண்ட இலக்கைச் சென்றடைவதில்தாம் குவிந்திருக்கும். அவரும் அலைகளுடன் போரிடத்தான் செய்கின்றார். என்றாலும் அவர் அலைகளுடன் போரிடுவதோடு இலக்கை நோக்கி நீந்தி முன்னேறிச் செல்வதில் தம்முடைய திறமை முழுவதையும் குவித்துவிடுகின்றார்.

உங்களுக்கு முன்னாலும் தெளிவான இலக்குகள் இருக்கின்றன. உங்களுக்கு முன்னாலும் தீர்க்கமான இலட்சியங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வரையில் இறைவனின் செய்தியை எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணி உங்கள் முன்னால் இருக்கின்றது. ஒவ்வொரு மனிதரின் இதயக் கதவுகளையும் நீங்கள் தட்ட வேண்டியிருக்கின்றது. மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டியிருக்கின்றது. இதுதான் உங்களுக்கு முன்னால் இருக்கின்ற இலக்கு. இதுதான் நீங்கள் அடைய வேண்டிய இலட்சியம். இங்கு சமுதாயமும் தேசமும் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்னைகளிலும் நீங்கள் அவசியம் கவனம் செலுத்துங்கள். உரிமைக் குரல் எழுப்புங்கள். என்றாலும் உண்மையான இலக்கை என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிடாதீர்கள். ரீடிசைனிங் ஃபியூச்சர் - எதிர்காலத்தை வடிவமைக்கின்ற பணியை மறந்துவிடாதீர்கள். நாம் ஏற்றுக்கொண்டுள்ள இலக்கை வென்றடைய வேண்டும் என்பதை நெஞ்சங்களில் பசுமையாக வைத்துக்கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.

ரீக்ளைமிங் டிக்னிட்டி - கண்ணியத்தை மீட்டெடுப்போம் என்பதற்குப் பொருள் நம்முடைய கண்ணியத்தை நாம் மீட்டெடுப்போம் என்பதல்ல.

நாம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடைய கண்ணியத்தையும் மீட்டெடுக்கவே விரும்புகின்றோம். ஆதிவாசிகளின் கண்ணியத்தை, தலித்களின் கண்ணியத்தை, பெண்களின் கண்ணியத்தை மீட்டெடுக்கவே நாம் விரும்புகின்றோம். இன்றைய இந்தியாவில் பெண்களுக்கு தாயின் கருவறை கூட பாதுகாப்பானதாக இல்லை. கடந்த சில ஆண்டுகளில் தாயின் கருவறையில் ஒன்றரை கோடி பெண் குழந்தைகளை இந்த நாடு கொன்று குவித்துள்ளது. இரண்டு உலகப் போர்களிலும்கூட இந்த அளவுக்கு மனிதர்கள் மாண்டதில்லை. ஆனால் இந்த நாட்டில் பெண்கள் இத்துணை பெரும் எண்ணிக்கையில் சாகடிக்கப்பட்டிருக்கின்றார்கள். பெண்களின் கண்ணியத்தையும் நாம் மீட்டெடுக்க வேண்டியுள்ளது.

இதுதான் ஒளிமயமான எதிர்காலம்.

இந்த எதிர்காலத்தை எப்படிக் கட்டமைக்கப் போகின்றோம்? இதற்காக எத்தகைய வழிமுறையை மேற்கொள்ளப் போகின்றோம்?

அன்பர்களே! நீங்கள் அனைவரும் கல்லூரிகளிலும் பல்கøøக் கழகங்களிலும் படித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அந்தக் கல்வி வளாகங்கள்தாம் இந்த நாட்டின் எதிர்காலம். எந்த மாண்புகளை நீங்கள் இந்த நாட்டில் நிலைநாட்ட விரும்புகின்றீர்களோ அந்த மாண்புகளுக்கு நீங்கள் கல்விவளாகங்களில் உயிரூட்டுங்கள். அந்தக் கல்வி வளாகங்களில் நீங்கள் செய்கின்ற பணியின் மூலமாக ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்க முடியும். ஊழல் இல்லாத இந்தியாவைக் கட்டமைக்க விரும்புகின்றிர்களா? கல்வி வளாகத்திலிருந்து அதற்கான பணியைத் தொடங்கிவிடுங்கள். இங்கு திரண்டிருக்கின்ற அனைவரும் முறைகேடுகளில் ஈடுபடவும் மாட்டோம், நடக்க விடவும் மாட்டோம் என்கிற உறுதியுடன் இங்கிருந்து திரும்புங்கள். தேர்வு அறைகளில் முறைகேட்டைத் தடுத்து நிறுத்துங்கள். நாளைய இந்தியா ஊழல் அற்ற இந்தியாவாக மலரும்.

பெண்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க விரும்புகின்றீர்களா?

கல்வி வளாகங்களில் ஈவ் டீசிங் போன்ற அவலங்களைத் தடுத்து நிறுத்துங்கள். பெண்களை மதிக்கின்ற, பெண்களைப் பாதுகாக்கின்ற இந்தியாவாக நாளைய இந்தியா மலரும்.

சாதிக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்துங்கள். கல்வி வளாகங்களிலிருந்து சாதி அரக்கனை வெளியேற்றுங்கள். மனிதர்களை மதிக்கின்ற இந்தியாவாக நாளைய இந்தியா மலரும்.

இந்த நாட்டுக்குச் சிறப்பான தலைமை எப்படி உருவாகும்? அன்பர்களே! நீங்கள் படிக்கின்ற கல்லூரியில் உங்களுடன் வகுப்பறையில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவர்தான் இந்த நாட்டின் பிரதமர் ஆக இருக்கின்றார். அவர்களில் ஒருவர்தான் தொலைக்காட்சிச் சேனலின் அதிபராக வர இருக்கின்றார். அவர்களில் ஒருவர்தான் நாளிதழ்களின் ஆசிரியராக, ஐஏஎஸ் அதிகாரியாக வர இருக்கின்றார். அவருடைய ஒழுக்கத்தை, வாழ்வைப் பற்றிய பார்வையை, சமூகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிவிடுங்கள். உண்மை, நேர்மை, பதில் அளிக்கும் பொறுப்பு உணர்வு போன்றவற்றை அவருக்கு ஊட்டிவிடுங்கள். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமானதாய் ஆகிவிடும்.

ஆக கண்ணியத்தை மீட்டெடுப்பதும் எதிர்காலத்தை வடிவமைப்பதும் உங்களின் கைகளில்தான் உள்ளது.

இன்றைய பிரச்னைகள் அனைத்துக்கும் இஸ்லாம் தான் ஒரே தீர்வாக, நிலையான தீர்வாக இருக்கின்றது. இந்த நேரத்தில் ஒன்றை நான் அழுத்தமாகப் பதிவு செய்யவே விரும்புகின்றேன். இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் மாணவர்கள் தம்முடைய 10, 12 ஆண்டுக்கால பள்ளி, கல்லூரி வளாக வாழ்வில் குறைந்தபட்சம் ஆறு முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் சொல்வார்களேயானால், இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளை களைவார்களேயானால், இஸ்லாத்தைப் பற்றிய மென்மையான போக்கை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவார்களேயானால் 15 ஆண்டுகளுக்குள்ளாக இந்த நாட்டின் காட்சி எப்படி மாறிவிடும் தெரியுமா?

அரசுத் துறை, நீதித் துறை, ஊடகம் போன்றவற்றில் சேர்கின்ற அனைவருமே இஸ்லாத்தைப் பற்றி நல்ல முறையில் விளங்கிக் கொள்பவர்களாய் இருப்பார்கள். இன்று சமுதாயம் எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிகள் அனைத்தும் தாமாக அகன்றுவிடும்.

இதுதான் ஒளிமயமான எதிர்காலம்.

அன்பிற்கினியவர்களே! இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை.

வெறுமனே ரியாக்ட் செய்பவர்களாய், எதிர் வினையாற்றுபவர்களாய், ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் செய்பவர்களாய், பிரச்னைகள் குறித்து ஒப்பாரி வைப்பவர்களாய், குமுறிக் கொண்டிருப்பவர்களாய் நாம் தேங்கி, முடங்கி இருந்துவிடக் கூடாது. அதற்கு மாறாக இந்த ஒளிமயமான எதிர்காலத்துக்காக திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். ஓயாமல் ஒழியாமல் உழைக்க வேண்டும். இறைவன் நிச்சயமாக நமக்குத் துணை நிற்பான்.
இறுதியாக ஒன்று. ரீடிஃபைனிங் ஃபியூச்சர் - எதிர்காலத்தை வடிவமைப்போம் என்றால் இந்த உலக வாழ்வைப் பற்றிய எதிர்காலம் மட்டுமே பொருள் ஆகாது. நம் அனைவருடைய முழுமையான எதிர்காலம் நமக்குக் கிடைக்கவிருக்கும் மறுமை வெற்றிதான். இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதுதான் உண்மையான ஒளிமயமான எதிர்காலமாக இருக்கும்.
இந்த மாநாடு வெற்றியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

- (23 பிப்ரவரி 2018) தில்லியில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் துணைத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆற்றிய உரையிலிருந்து...

1 comment:

Unknown said...

Dear Brother

Assalamu allaikum

Jazakallah Kahir ,for the detail translations ,may allah accept our work , kindly arrange to publish it for next Samarasam Issue

Wassalam

Abdul Malik

Related Posts Plugin for WordPress, Blogger...